”கனிமவளக் கொள்ளை மட்டும் தான் திமுகவின் முதன்மைத் தொழிலா.?” - அன்புமணி ராமதாஸ்..!
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“தமிழ்நாட்டில் 30 மணல் குவாரிகளை புதிதாகத் திறக்க திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்கள், கடலூர் மாவட்டத்தில் 2 இடங்கள், தஞ்சாவூர், நாமக்கல், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் இடம் என 8 மணல் குவாரிகளை வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திறக்க இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குவாரிகளைத் திறந்தது. அந்த மணல் குவாரிகளில் 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் அந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் மணக் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய ஆய்வில் இந்த மணல் குவாரிகளில் 27.70 லட்சம் அலகுகள் மணல் அள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 4 மடங்கு ஆகும். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில் வெட்டி எடுக்கப்பட வேண்டிய மணலை விட 4 மடங்கு மணல் மிகச் சில மாதங்களிலேயே வெட்டி எடுக்கப்பட்டு விட்டதாலும், மணல் கொள்ளை மூலம் ஈட்டப்பட்ட வருவாய் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததாலும் அந்த மணல் குவாரிகள் மூடப்பட்டன. மூடப்பட்ட மணல் குவாரிகளையும் சேர்த்து மொத்தம் 26 மணல் குவாரிகளை திறக்க கடந்த ஆண்டிலிருந்தே திமுக அரசு துடித்து வந்தது. அதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் அனுமதியை பெற்றுள்ள திமுக அரசு, இப்போது அதன் மணல் கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.
மக்களின் நலனுக்கான எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக அரசு, கனிமவளக் கொள்ளையை மட்டுமே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கிறது. தமிழகத்தின் நடப்பதை திராவிட மாடல் அரசு என்று அழைப்பதை விடுத்து கனிமவளக் கொள்ளை அரசு என்று அழைப்பது தான் சரியாக இருக்கும். இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் திமுகவுக்கு தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். அவ்வாறு ஆட்சி மாற்றம் நிகழும் போது திமுக ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட கனிமவளக் கொள்ளைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.