மருத்துவக் காப்பீட்டுத் துறையில் தடம் பதிக்கிறதா எல்ஐசி?
மருத்துவக் காப்பீட்டுத் துறையில் நுழையும் திட்டமில்லை என்று நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) கடந்த 1956ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான இது, ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இது நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக விளங்குகிறது.
இதனிடையே, எல்ஐசி நிறுவனம் மருத்துவக் காப்பீட்டிலும் தடம் பதிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் எல்ஐசி நிறுவனம், மருத்துவக் காப்பீட்டுத் துறையில் தடம் பதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என கூறி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"தனியாா் நிறுவனங்கள் மூலம் மருத்துவக் காப்பீட்டுத் துறையில் தடம் பதிக்கும் திட்டம் எல்ஐசியின் பரிசீலனையில் தற்போது இல்லை. அதே நேரத்தில் தொழிலை மேம்படுத்தும் அனைத்து வாய்ப்புகளையும் எல்ஐசி தொடா்ந்து பயன்படுத்த முயற்சிக்கும். இதற்காக பிற நிறுவனங்களுடன் கைகோப்பது, முதலீடு செய்வது போன்றவைகளும் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.