இது என்ன இட்லிக்கு வந்த சோதனை...? ஆய்வு முடிவால் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இட்லி, சன்னா மசாலா, ராஜ்மா போன்ற உணவுகள் பல்வேறு உயிர்களை பாதிப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகின் பிரபலமான 151 உணவு வகைகளை ஆய்வு செய்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உலகில் பல்வேறு உயிர்கள் மனிதர்களின் உணவுப் பழக்கங்கள் வெகுவாகப் பாதிக்கின்றன என தெரிவித்துள்ளனர். பொதுவாக இறைச்சி உண்ணுவதால் அதிக பல்லுயிர்த்தன்மை என அழைக்கப்படும் உயிர்களை அழிவது ஏற்படுகிறது. மாடு போன்ற விலங்குகளை வெட்டும் போது வெளியாகும் வளிமண்டல மீத்தேன் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறுகின்றனர்.
ஒரு உணவை தயாரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதிக பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் இட்லியும், 7ஆவது இடத்தில் ராஜ்மாவும், 20ஆவது இடத்தில் தாலும், 22ஆவது இடத்தில் சன்னா மசாலாவும், 96 ஆவது இடத்தில் ஆலு பரோட்டாவும், 103 ஆவது இடத்தில் தோசையும் உள்ளன.
பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அரிசி மற்றும் பருப்பு வகைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், பல்லுயிர் தன்மை இந்தியாவில் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உயிரி- அறிவியல் இணைப் பேராசிரியரான லூயிஸ் ரோமன் கராஸ்கோ தெரிவித்துள்ளார்.