"விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?" - நடிகர் கிஷோர் கேள்வி
"விவசாயிகள் பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?" என நடிகர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஹரியானா-பஞ்சாப் எல்லையான ஷம்புவில் குவிந்த விவசாயிகள், தலைநகர் டெல்லிக்குள் நுழைய படையெடுத்து வருகின்றனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த துணை ராணுவப் படையினர் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
இதையும் மீறி உள்ளே நுழைய முயன்ற விவசாயிகளை இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, சுப்கரன் சிங் என்ற 23 வயது விவசாயி காயமடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மேலும் உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின்பேரில், சட்டம் ஒழுங்கை பராமரிக்க 177 சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணையதள இணைப்புகளைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஸ்னாப்சாட் மற்றும் சில சமூக ஊடக தளங்களின் கணக்குகள் மற்றும் இணைப்புகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
” பயிர்களுக்கு நியாயமான விலை கேட்பது இந்த நாட்டில் அநியாயமா?? குறைந்தபட்ச ஆதார விலை தருவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் விவசாயிகள் விளைவித்த உணவைத் தின்று உயிரோடு இருக்கும் மக்களும், ஊடகங்களும் அதே விவசாயிகளை துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றன, இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்வது?
விவசாயிகளுக்கு எதிராக சாலைகளில் இரும்பு கம்பிகள் நடப்படுகின்றன, குறுக்கே சுவர்கள் கட்டப்படுகிறது, தோட்டாக்கள் பிரையோகிக்கப்படுகிறது , கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இவை அனைத்தையும் செய்தது மோடியின் அரசுதான். முழு நாட்டிற்கும் உணவு வழங்கும் விவசாயிகள் மீது தேச விரோத முத்திரை குத்தப்படுகிறது.
நமது விவசாயிகள் தேசவிரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா??”