“எதிர்க்க வேண்டியது பாஜகவையா? இடது முன்னணியையா?” - காங்கிரஸுக்கு பினராயி விஜயன் கேள்வி
மக்களவைத் தேர்தலில் எதிர்க்க வேண்டியது பாரதிய ஜனதா கட்சியையா அல்லது இடது ஜனநாயக முன்னணியையா என்பதை காங்கிரஸ் கட்சி முடிவு செய்ய வேண்டும் என்று கேரள முதலவர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடது ஜனநாயக முன்னணி இரண்டும் உள்ளன.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். இந்நிலையில் வரவுள்ள 2024 மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் “ராகுல் காந்தி கேரள மாநில அரசியலின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்குப் பதிலாக, பாஜகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிப்பதில் ஆர்வம் காட்டலாம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலப் பொதுச் செயலாளர் கோவிந்தன் குட்டி தெரிவித்தார்.
இதனை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயனும் இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராகுல் காந்தியை கேரளாவின் வயநாட்டில் போட்டியிட வைப்பதன் மூலம் காங்கிரஸ் பாஜகவை எதிர்க்கப் போகிறதா அல்லது இடது ஜனநாயக முன்னணியை எதிர்க்கப் போகிறதா? எனவே ராகுல் காந்தி எதிர்க்கப் போவது பாஜகவையா அல்லது இடது ஜனநாயக முன்னணியையா என்பதை காங்கிரஸ் கட்சி முடிவு செய்யவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.