For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? அன்புமணி ராமதாஸ்!

திண்டிவனம் நகராட்சி நிகழ்வில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
01:55 PM Sep 04, 2025 IST | Web Editor
திண்டிவனம் நகராட்சி நிகழ்வில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா  அன்புமணி ராமதாஸ்
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "திண்டிவனம் நகராட்சியில் திமுக நகர்மன்ற உறுப்பினரின் சட்டவிரோத ஆணைகளுக்கு பணிய மறுத்ததற்காக அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும்படி, பட்டியலினத்தைச் சேர்ந்த நகராட்சி இளநிலை உதவியாளர் முனியப்பனை கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். சமூகநீதியைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்ததாகக் கூறிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பட்டியலின அரசு அதிகாரி ஒருவரை திமுகவினரே காலில் விழச் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisement

திண்டிவனம் நகராட்சியில் நடைபெற்ற ஒப்பந்தப் பணிகள் தொடர்பான கோப்புகளை தம்மிடம் கொண்டு வந்து காட்டும்படி திமுகவைச் சேர்ந்த பெண் நகராட்சி உறுப்பினர் கட்டாயப்படுத்தியதாகவும், அதை செய்ய மறுத்ததற்காக அந்த உறுப்பினரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும்படி நகராட்சித் தலைவர், அவரது கணவர் உள்ளிட்டோர் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் உறுப்பினரின் கால்களில் விழுந்து முனியப்பன் மன்னிப்புக் கேட்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நகராட்சி இளநிலை உதவியாளருக்கு எந்த வகையான ஆணையை பிறப்பிக்கவும் நகர்மன்ற உறுப்பினருக்கு அதிகாரம் இல்லை. ஒருவேளை அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால் அது குறித்து நகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் புகார் அளித்து சட்டப்பூர்வமாகத் தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும்படி திமுகவினர் கட்டாயப்படுத்தியிருப்பது அவர்களுக்கு அக்கட்சித் தலைமை எத்தகைய சமூகநீதிப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

திண்டிவனம் நிகழ்வில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் ஏராளமான நிகழ்வுகளில் பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் தான் திமுக நடந்து கொண்டுள்ளது. இதே விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டம் ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவரான பழங்குடியினத்தை சேர்ந்த சங்கீதாவுக்கு இருக்கைக் கூட வழங்கப்படாமல் அவர் மீது சாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஒரு கட்டத்தில் இந்த நிகழ்வை மருத்துவர் அய்யா அவர்கள் கண்டித்து, போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்த பிறகு தான் அவருக்கு இருக்கை வழங்கப்பட்டது.

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலினத்தவருக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான உள்ளாட்சிகளில் பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது, நாங்குநேரி சின்னத்துரை உள்ளிட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டது என பட்டியலினத்துக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்தக் கொடுமைகள் அனைத்தையும் திமுக அரசு வேடிக்கை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.

பட்டியலின பணியாளரை திமுவினரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்க செய்வது தான் திமுக கடைபிடிக்கும் சமூகநீதியா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும். பட்டியலின அதிகாரியை அவமதித்த திமுகவினர் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர, அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை; அவர்கள் மீது திமுக தலைமையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மூலம் அவர்களின் செயலை திமுக தலைமை ஆதரிக்கிறதா? என்பது தெரியவில்லை. திண்டிவனம் நகராட்சி நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags :
Advertisement