For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ் பேசமுடியவில்லையே எனக் கூறிக்கொண்டு, தமிழுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதுதான் நாகரீகமா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

08:32 PM Mar 12, 2025 IST | Web Editor
“தமிழ் பேசமுடியவில்லையே எனக் கூறிக்கொண்டு  தமிழுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதுதான் நாகரீகமா ”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி
Advertisement

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த திமுக சார்பில், மத்திய பாஜக அரசை கண்டித்து ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Advertisement

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

“ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், பாஜக அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுக காவல் அரணாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு உள்ளது.

மத்திய அரசு நம்மை சிறுமைப்படுத்தப் பார்க்கிறது. பதவி சுகத்திற்காக மத்திய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பில்லாத அடிமைக் கூட்டமல்ல நாம். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்திலும் மக்கள் குரலாக ஒலிப்போம்.

நான் பிரதமரானால் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் மாநிலங்களை எப்படி அழிப்பது, எப்படி ஒழிப்பது; மாநில உரிமைகளை எப்படி பறிப்பது என்பது போன்ற சர்வாதிகார எண்ணமாகவே மோடியின் செயல்பாடுகள் உள்ளது. மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, கூட்டாச்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து நீங்கள் செயல்படுத்திய செயல்பாடுகள் என்ன?.

பிரச்னைகள் எழும்போது மாநில முதலமைச்சர்களை அழைத்து பேசியிருக்கிறீர்களா? ஆலோசனை நடத்தி உள்ளீர்களா?. தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ரூ.2150 கோடி நிதியை கொடுக்காமல் பழிவாங்கும் அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

2012-ல் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, “குஜராத் மக்கள் ரூ.60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகின்றனர். ஆனால் மத்திய அரசிடமிருந்து திரும்ப வரும் அளவு மிக மிக குறைவு. குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா?” என பிரதமர் மோடி கேட்டார்.  அதே கேள்வியை நான் திரும்ப கேட்கிறேன். தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?.

நாங்கள் செலுத்தும் வரியில் எங்களுக்கான நிதியை கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?. மாணவர்களின் நலனுக்கான திட்டம் என்றால் நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம்?. தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் நலனுக்கானதா?. கல்வியில் இருந்து மக்களை நீக்குவதற்கான அத்தனை செயல் திட்டங்களையும் கொண்டதாகத்தான் இந்த கல்விக் கொள்கை உள்ளது. இதுதான் எதிர்ப்பதற்கான காரணம்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய இனம், நம்முடைய தமிழினம். உலகத்திற்கு, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பாட்டை உருவாக்கிக் கொடுத்தது. அத்தகைய தமிழர்களுக்கு ஜனநாயகம் தெரியாதா? நாகரிகம் தெரியாதா? வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது!

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அறம் பேசும் தமிழினத்துக்கு ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பு எடுக்காதீர்கள். தமிழ்நாடு விடாமல் போராடுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

எங்களிடமே வரி வசூலித்து, எங்களையே பட்டினி போடுவதுதான் நாகரீகமா?. தமிழ் பிடிக்கும். தமிழ் பேச முடியவில்லையே எனக் கூறிக்கொண்டு, தமிழுக்கு நிதி ஒதுக்காமல், சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்குவதுதான் நாகரீகமா?. தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்போம் எனக்கூறிக் கொண்டு சமஸ்கிருதம், ஹிந்தியை திணிப்பதுதான் நாகரீகமா?.

பேரிடர் நிதியை ஒதுக்காமல் வஞ்சிப்பதுதான் நாகரீகமா?. ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு, ஏழு ஆண்டுகளாக கட்டாமல் இருப்பதுதான் நாகரீகமா?. நாகரிகத்தைப் பற்றி யார் பேசுவது? அநாகரிகத்தின் அடையாளமே நீங்கள்தான். அநாகரிகத்தையே அராஜகமாகப் பயன்படுத்துவது நீங்கள்தான். இந்தி மொழியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நிதி தர மாட்டோம் என்று சொல்வதைவிட அராஜகம் இருக்க முடியுமா?.

தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. தென் மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத பாஜக, வடமாநிலங்களில் பெறும் வெற்றியை வைத்தே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறது. அதுதான் சதி.

தங்களுக்கு செல்வாக்கான மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இதைத் திமுக தடுத்து நிறுத்தும். தென் மாநிலக் கட்சிகள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு தடுப்போம்.

பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம். சமூகநீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சி இந்தியா, மாநில சுயாட்சிக் கோட்பாடுகளின்கீழ் இந்தியாவை அணி திரட்டுவோம். அவ்வாறு அணி திரட்டினால் மட்டும்தான், இந்தியாவைக் காப்பாற்ற முடியும். பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய வேண்டுகோள். இந்தியை வளர்ப்பதைவிட இந்தியாவைப் வளர்க்கப் பாருங்கள்; எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும், சமஸ்கிருதத்தை வளர்க்க முடியாது.

இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் பற்றி எரிகிறது. 250 கொல்லப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த சிறு துரும்பைக் கூட பாஜக அரசு நகர்த்தவில்லை. மீனவர்கள் கைது தொடர்கிறது. சிறிய நாடான இலங்கை கூட இந்தியாவை மதிக்கவில்லை. அதல பாதாளத்தில் இந்தியா இறங்கிக் கொண்டிருக்கிறது.

இதனை தடுக்க வேண்டிய பொறுப்பு மாநில கட்சியாக இருந்தாலும், திமுகவிற்கு உள்ளது” என தெரிவித்தார்.

Tags :
Advertisement