For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“#NEP-யை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜகவின் நடவடிக்கையா?” - முதலமைச்சர் #MKStalin கேள்வி!

11:04 AM Sep 09, 2024 IST | Web Editor
“ nep யை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜகவின் நடவடிக்கையா ”   முதலமைச்சர்  mkstalin கேள்வி
Advertisement

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜக அரசின் நடவடிக்கையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிள்ளார்.

Advertisement

மத்திய அரசு நாடு தழுவிய அளவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை 2020-ம் ஆண்டில் வெளியிட்டது. இந்தக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக துவக்கப் பள்ளி முதல் பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை, 3 ஆண்டு பட்டப்படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், 2-ம் ஆண்டுடன் நிறுத்தினால் பட்டயம், 3 ஆண்டு முடித்தால் பட்டம் போன்றவை இடைநிற்றலை ஊக்குவிக்கும் என்பதால் எதிர்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி பணத்தின் முதல் தவணை தொகை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. ஆர்டிஇ சட்டத்தின்கீழ் 25% இடங்களுக்கான நிதியை சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தை மத்திய  அரசின் 60% நிதி பங்களிப்புடன் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மீதமுள்ள 40% நிதிக்கு மாநில அரசே பொறுப்பு.

தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு நிராகரித்ததால் திட்டத்துக்கான் நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் SSA திட்டத்திற்கு மத்திய அரசு 4 தவணைகளில் ரூ.2,152 கோடி வழங்க வேண்டும். முதல் தவணையான ரூ.573 கோடி ரூபாயை ஜூன் மாதமே வழங்கியிருக்க வேண்டிய நிலையில், தமிழக அரசு சார்பில் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.

சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டிருப்பதால், வட்டார வள மைய பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் பேருக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்துடன் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், ஆசிரியர் பயிற்சி, மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சி ஆகியவையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு அந்த நிதியை விடுவிக்காததால் சில மாதங்களாக தமிழ்நாடு அரசின் நிதியில் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், புதிய கல்விக் கொள்கை அம்சங்களைத் தவிர்த்து பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து கடிதம் அனுப்பியது. ஆனால், இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில், மாநில கல்வித்துறைக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்காதது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “NEP-க்கு (தேசிய கல்விக் கொள்கை) தலைவணங்க மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பாஜக மறுக்கிறது. அதே நேரத்தில் கல்வியில் குறிப்பிட்ட இலக்கை அடையாதவர்களுக்கு தாராளமாக நிதியை பாஜக அளிக்கிறது. தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசின் திட்டம் இதுதானா? இதுபற்றி நம் தேச மக்களே முடிவெடுக்க வேண்டும் என விட்டுவிடுகிறேன்!” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனியார் பத்திரிகை நிறுவனத்தில் வெளியான ரிப்போர்ட் ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், தேசிய குடும்பநலத் துறை சர்வே 2019-2020ஐ குறிப்பிட்டு, கல்வியில் அதிக முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு பிஎம் ஸ்ரீ திட்டம் மூலம் உரிய நிதியை வழங்க மறுக்கிறது என பதிவிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement