தேர்தலில் போட்டியிடுகிறாரா நடிகர் சூர்யா..? - ரசிகர் மன்றம் விளக்கம்!
தமிழ் நாடு அரசியலுக்கும் தமிழ் திரையுலகிற்கும் நீண்டகால தொடர்பு உள்ளது. எம்.ஜி.யார். தொடங்கி கமலஹாசன் வரை பல்வேறு தமிழ் சினிமா நடிகர்கள் அரசிலுக்கு வந்துள்ளார்கள். சமீபத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சி தொடங்கியுள்ளார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட உள்ளது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா அரசியலுக்கு வரவுள்ளதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் தற்போது இந்த செய்தியை சூர்யாவின் ரசிகர் மன்றம் மறுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக செய்தியில்
”கடந்த சில நாட்களாக சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல.அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.
கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது. சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.
சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி! அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.