ஈரான் துறைமுக வெடிவிபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆக உயர்வு!
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் கடந்த (ஏப்.26) பிற்பகல் திடீரென மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து துறைமுகத்துக்கு அருகே உள்ள கண்டெய்னர் யார்டில் நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர வெடி விபத்தின் அதிர்வலையானது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தினால் ஏற்பட்ட தீ மளமளவென பரவி அதிகளவில் கரும்புகை கிளம்பியதாக தெரிகிறது.
உடனடியாக இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இதனிடையே விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1000திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் ஒரு சிலரின் அலட்சிய போக்கினால் வெடி விபத்து ஏற்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.