இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்: போர்ப்பதற்றம் அதிகரிப்பு..!
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. எஞ்சிய பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
அதேவேளை ஹமாஸ் அமைப்பினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 33 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானின் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது.
இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால், மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை தத்தம் நாட்டு மக்களுக்கு விடுத்தன.
இந்நிலையில், இன்று (ஏப்.14) அதிகாலை இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளது. ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.