ஐபிஎல் | வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை? டெல்லி அணியுடன் இன்று மோதல்!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இதுவரை 16 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு, குஜராத் அணிகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று (ஏப்.5) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில், மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி இதுவரை ஆடிய 3 ஆட்டங்களில் ஒரு வெற்றியும், 2 தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி ஆடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தொடர் தோல்விகளிலிருந்து மீள சென்னை அணி கடுமையாக போராடும். அதேபோல், வெற்றிப்பயணத்தை தொடர டெல்லி தீவிரம் காட்டும். இதனால், இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதனையடுத்து, இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி ராஜஸ்தானுடன் மோதுகிறது. பஞ்சாப் அணி ஆடிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி ஒரு வெற்றியும், 2 தோல்வியும் கண்டு 9வது இடத்தில் உள்ளது. ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க பஞ்சாப் அணியும், வெற்றிப்பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணியும் போராடும்.