ஐபிஎல் | வெல்லப்போவது யார்? டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று மோதல்!
10 அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
பெங்களூரு அணி தனது முதல் இரு ஆட்டங்களில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவையும், 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையையும் வீழ்த்தியது. அடுத்ததாக உள்ளூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்றது. கடந்த ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
டெல்லி அணி தனது முதல் 3 ஆட்டங்களில் லக்னோ, ஹைதராபாத், சென்னை அணிகளை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தது. நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காக ஒரே அணியாக டெல்லி உள்ளது. தனது வெற்றிப்பயணத்தை தொடர டெல்லி அணியும், 4வது வெற்றியை பதிவு செய்ய பெங்களூரு அணியும் போராடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19 ஆட்டங்களில் பெங்களூரு அணி, 11 ஆட்டங்களில் டெல்லி அணி வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.