மும்பை இந்தியன்ஸ் அணியின் IPL வீடியோ... பேசுபொருளான ரோகித் - பாண்டியா இடைவெளி!
ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் வீடியோவில், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இடைவெளி விட்டு அமர்ந்திருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வலுவான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்குகிறது. 10 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து பெரிய அளவிலான தொகைக்கு டிரேடிங் செய்திருந்தது மும்பை அணி.
ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணியுடன்தான் தொடங்கினார். கடந்த 2022-ல் மும்பை அணியில் இருந்து விலகி அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸுக்கு கேப்டனாக சென்றார். அங்கு இரு சீசன்களாக விளையாடிய அவர், தனது ஆல்ரவுண்ட் திறனால் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ள அவர், கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார்.
இந்நிலையில் மும்பையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹர்திக் பாண்டியா,
“கேப்டன் மாற்றம் என்பது வித்தியாசமாக இருக்காது. ரோஹித் சர்மா எப்போதும் எனக்கு உதவுவார். அவர், தலைமையில் மும்பை அணி சாதித்துள்ளது. இதை நான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நான் எனது முழு கிரிக்கெட் வாழ்க்கையையும் அவருக்கு கீழ் விளையாடி உள்ளேன். ஐபிஎல் சீசன் முழுவதும் அவர் என் தோளில் கை போட்டு அழைத்துச் செல்வார். அதேவேளையில் ரசிகர்களையும் நாங்கள் மதிக்கிறோம். என்ன தேவையோ அதை அறிந்து விளையாட்டில் கவனம் செலுத்துகிறோம். எனது உடலில் எந்த பிரச்னையும் இல்லை. அனைத்து ஆட்டங்களிலும் விளையாட திட்டமிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.
Har dhadkan, har dil ye bole 𝙈𝙪𝙢𝙗𝙖𝙞 𝙈𝙚𝙧𝙞 𝙅𝙖𝙖𝙣 🎶💙#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan pic.twitter.com/Z911mvKOI1
— Mumbai Indians (@mipaltan) March 18, 2024
செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, ஐபிஎல் 2024 சீசனுக்கான குழு வீடியோவை மும்பை அணி வெளியிட்டது. இதில் சச்சின் டெண்டுல்கருடன், பெரும்பாலான அணி வீரர்கள் இடம்பெற்றனர். ஒரு நிமிடம் மற்றும் 32 வினாடிகள் கொண்ட வீடியோவை பார்த்த பெரும்பாலான மும்பை ரசிகர்கள் இரு மூத்த கிரிக்கெட் வீரர்களையும் ஒன்றாகப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். மற்றவர்கள் ஹர்திக் மற்றும் ரோஹித் இருவரும் தங்களுக்கு இடையே பெரிய இடைவெளி விட்டு அமர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டினர்.