ஐபிஎல் ஒளிபரப்பு உரிம மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியை எட்டும் - ஐபிஎல் தலைவர் அருண் துமல்!
ஐபிஎல் ஒளிபரப்புக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.4.16 லட்சம் கோடியை எட்டும் என நம்புவதாக ஐபிஎல் தலைவர் அருண் துமல் தெரிவித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ஐபிஎல் தலைவர் அருண் துமல் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டி கடந்து வந்த பாதையையும், தற்போது ரசிகர்களிடம் அதற்கு இருக்கும் மதிப்பையும் பார்க்கையில், வரும் 2043-இல் ஐபிஎல் போட்டி ஒளிபரப்புக்கான உரிம மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன். ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் கிரிக்கெட்டை புதிதாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும்.
இதையும் படியுங்கள்: சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் நாளை பயணிக்கலாம்!
அதே போல் அதன் தரத்தையும் அதிகரிக்க வேண்டும். ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது, மகளிர் பிரீமியர் லீக் போட்டி தொடங்கியிருப்பது என கிரிக்கெட் சார்ந்த வருவாய் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.
கடந்த 2008-இல் ஐபிஎல் ஒளிபரப்பு உரிம மதிப்பு ரூ.6,000 கோடியாக இருந்த நிலையில், 2022 முதலான 5 ஆண்டுகாலத்துக்குரிய ஒளிபரப்பு மதிப்பு ரூ.48,000 கோடியாக இருப்பது நினைவுகூரத்தக்கது.
அருண் துமல் மதிப்பீட்டின்படி பார்த்தால், அமெரிக்காவின் என்எஃப்எல் போட்டிக்குப் பிறகு, உலகிலேயே அதிக மதிப்பு மிக்க லீக் போட்டியாக ஐபிஎல் உருவெடுக்கும். என்எஃப்எல் போட்டிக்கான ஒளிபரப்பு மதிப்பு கடந்த ஆண்டு முதலான 11 ஆண்டு காலத்துக்கு ரூ.9.16 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.