IPL Auction 2024 | ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ்!
ஐபிஎல் ஏலத்தில் பேட் கம்மின்சை ரூ.20.50 கோடிக்கு ஐதரபாத் அணி எடுத்துள்ளது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசியில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரஸ்பர வர்த்தக அடிப்படையில் வீரர்கள் பரிமாற்றம் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. வீரர்கள் பரிமாற்றத்தில் ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியில் இருந்து மும்பைக்கும், கேமரூன் கிரீன் மும்பை அணியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கும் தாவியது குறிப்பிடத்தக்கது.
அதிகமான சர்வதேச போட்டி இருப்பதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் 2024-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் இருந்து விலகி விட்டனர். இந்த நிலையில் கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் இன்று (டிச.19) நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: 39 மணி நேரமாக மரத்தில் தொங்கியபடி தவித்த 72 வயது விவசாயி – 1 மணி நேரம் போராடி மீட்ட எஸ்டிபிஐ கட்சியினர்!
ஏலம் துவங்கியதில் இருந்தே விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இன்றி வீரர்கள் ஏலம் நடைபெற்று வந்தது. அந்த வகையில், ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ்சை தங்கள் அணிக்கு எடுக்க பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
துவக்கத்தில் மும்பை அணி கோதாவில் இருந்தது. எனினும், விலை 10 கோடியை தாண்டியதும் மும்பை விலகிக் கொண்டது. ஆனால், ஐதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொஞ்சமும் சளைக்காமல் ஏல தொகையை உயர்த்திக் கொண்டே சென்றன.
ஒரு வழியாக 20.50 கோடி ரூபாய் வந்த பிறகே பெங்களூர் அணி விட்டுக் கொடுத்தது. இதன்படி, ஐதராபாத் அணி, பேட் கம்மின்ஸ்சை 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு முன்பாக சாம் கரனை பஞ்சாப் அணி 18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.