ஐபிஎல் 2025 | சிக்ஸர்களை பறக்க விட்ட க்ருணால் பாண்டியா... டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு அணி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஏப்.27) நடந்த 46வது லீக் ஆட்டத்தில் டெல்லி - பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக அபிஷேக் போரெல் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் களம் கண்டனர். இதில் அபிஷேக் போரெல் 28 ரன்கள் அடித்து பி ஜோஷ் ஹேசில்வுட்டிடம் ஆட்டமிழந்தார். ஃபாஃப் டு பிளெசிஸ் 22 ரன்களில் க்ருணால் பாண்ட்யாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து வந்த கருண் நாயர் வெறும் 4 ரன்களுடன் யாஷ் தயாளிடம் அவுட் ஆனார். அதன் பின்பு வந்த கே.எல். ராகுல் பொறுப்புடன் நிதானமாக ஆடி 41 ரன்கள் சேர்த்து புவனேஷ்வர் குமாரிடம் ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்கள் அடித்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து 163 என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் கண்டது. பெங்களூரு அணியின் ஜேக்கப் பெத்தேல் 12 ரன்களிலும், படிக்கல் ரன் எதுவும் எடுக்காமலும், ரஜத் படிதார் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தொடர்ந்து விராட் கோலி, க்ருணால் பாண்டியா இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் இணைந்து ரன்களை குவித்த நிலையில் விராட் கோலி 51 ரன்களுக்கு வெளியேறினார்.
இறுதியில் பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது . இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. க்ருணால் பாண்டியா 73 ரன்களுடனும், டிம் டேவிட் 19 ரன்களுடனும் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணியின் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.