ஐபிஎல் 2025 : பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி!
ஐபிஎல் 2025 தொடரில் நேற்று (ஏப்.12) நடைபெற்ற 27வது போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும், பிரப் சிம்ரன் சிங் 42 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் தரப்பில் ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளும், ஈஷன் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ஹைதராபாத் அணிக்கு 246 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் இருந்து விளாசத் தொடங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 66 ரன்னில் அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.