ஐபிஎல் 2025 : குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயம்... தொடர் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூரு?
இந்தியாவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 13 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது. ஐந்து ஐபிஎல் டிராஃபிகளை வென்ற சென்னை, மும்பை அணிகள் 7வது மற்றும் 5வது இடத்தில் உள்ளன.
இதனால் சென்னை மற்றும் மும்பை அணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை அணி மோசமாக தோர்த்தது. மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன் சரியாக இல்லாததே தோல்விக்கு காரணம் எனவும், தோனி முதலில் களமிறங்காதது ஏன் எனவும் சென்னை அணியின் தோல்வி குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னையும், மும்பை அணியும் கம்பேக் கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொடரின் 14வது போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதி வருகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு தரப்பில் லியாம் லிவிங்ஸ்டன் 54 ரன்களும், ஜிதேஷ் சர்மா 33 ரன்களும் எடுத்தனர்.
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக முன்னாள் பெங்களூரு வீரர் சிராஜ் 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் 170 ரன்கள் குஜராத் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.