ஐபிஎல் 2024 - வெற்றி வாகை சூடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!
ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிவாகை சூடியது.
ஐபிஎல் 2024 மார்ச் 22ம் தேதி தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில், அபிஷேக் 2 ரன்களில் வெளியேறினார். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து ராகுல் திரிபாதியும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி, மார்க்ரம், ஷாபாஸ் அகமது, அப்துல் சமாத், கிளாசன் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி அதிகப்பட்சமாக 24 ரன்கள் சேர்த்தார்.
இதனையடுத்து வந்தவர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, 18.3 ஓவர்கள் முடிவில் 113 ரன்களை மட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேர்த்தது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஸ்டார்க், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றிலேயே இறுதிப் போட்டியில் மிகக் குறைந்த இலக்கான 114 ரன்களை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரகுமானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரேன் களம் இறங்கினர்.
இதில் சுனில் நரேன் 6 ரன்களில் நடையை கட்டினாலும் குர்பாஸ் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். வெங்கடேஷுடன் கை கோர்த்து குர்பாஸ் அடித்து ஆடி வந்த நிலையில், 32 பந்துகளுக்கு 39 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸ்களும் அடங்கும்.
இதனை அடுத்து வெங்கடேஷும் ஸ்ரேயாசும் கை கோர்த்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த வெங்கடேஷ் 26 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸ்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.
இறுதியாக 10 ஓவர்கள் 3 பந்துகள் வீசப்பட்ட நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்களை சேர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக வெற்றி வாகைச்சூடியது.