இமாலய இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா - 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அசத்தல்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் லீக் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : ”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த அந்த அணி அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சுனில் நரைன் - ரகுவன்ஷி ஜோடி வெறியாட்டம் ஆடி ரன்களை குவித்தனர். சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்களை விளாசினார். அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் நோர்ஜே , இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. 17.2 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் டெல்லி அணி இழந்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் தனது 3வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.