"அதிமுக கூட்டணியில் சேர தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு" - கே.டி.ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் நடைபெறாத ஆசை. அவர் முயற்சி எல்லாம் வீணாகும்.
விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்று சொன்னால் எடப்பாடியார் தலைமையில் இருக்கின்ற அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தேர்தலோடு விஜயை திமுக முடித்து விடும். விஜய் நன்றாக யோசித்து அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும்.
விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், திமுக ஆட்சியை தூக்கி எறிவேன் என்று விஜய் சொல்வது உண்மையாக இருந்தால் அவர் அதிமுக கூட்டணியைத் தான் நாடி வரவேண்டும், அதுதான் விஜய்க்கு சரியான முடிவு.
விஜய் தனித்து நின்று களம் காண்போம் என்று கூறுவது திமுகவிற்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் தமிழக மக்கள் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் திமுகவிற்கு மாற்றாக அதிமுகவை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
ஸ்டாலினுக்கு மாற்றாக எடப்பாடி பழனிச்சாமியை தான் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலலில் நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.