“ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே” - மதுரை எம்.பி. #Venkatesan குற்றச்சாட்டு!
- ஒவ்வொரு விபத்தின் போதும் ஆய்வுகள் மட்டுமே நடைபெறுவது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது. ரயில்கள் மோதிக் கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பான யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில், 2 ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடம் புரண்ட 5 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 7 பெட்டிகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதனுடன், மின் கம்பிகளையும் சிக்னல்களையும் சரி செய்யும் பணிகளிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகளும், என்.ஐ.ஏ அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர். மேலும், இந்த ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் மற்றும் விபத்து நிகழ்ந்தபோது பணியில் இருந்த அதிகாரிகள் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சூழலில், ஒவ்வொரு விபத்தின் போதும் ஆய்வுகள் மட்டுமே நடைபெறுவது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே . ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் , ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது?"
இவ்வாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.