ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான சர்வதேச டெண்டர் ரத்து... தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கான மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் 3.03 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு டெண்டர் கோரப்பட்டது.
முதல் கட்டமாக வெளியிடப்பட்ட சர்வதேச டெண்டரில் 82 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வெவ்வேறு நிறுவனங்கள் டெண்டர் சமர்ப்பித்தன. அவற்றில் அதானி நிறுவனமே குறைந்தபட்ச விலை உடன் டெண்டர் கோரி இருந்தது. இதனால் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்புகள் இருந்தன. இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை தமிழ்நாடு மின்வாரியம் ரத்து செய்துள்ளது.