அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மணல் குவாரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை அளித்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணலை அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜரானார்.
இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத்தொடர்ந்து, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் முறையிட்டார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இருதரப்பு விசாரணையையும் கேட்ட நீதிபதிகள் இன்று (நவ. 28) தீர்ப்பளிப்பதாக தெரிவித்தார்கள்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறையின் ஆட்சேப மனுவுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு 3 வார அவகாசம் அளித்து தீர்ப்பளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அளித்த சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசும், மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்த மனுக்களை டிச.19-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் உத்தரவிட்டனர்.