தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை!
தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் செயல் அலுவலர் முருகனின் வாய்மொழி உத்தரவின் பேரில், கோயில் பகுதியில் இருந்து 100 டிராக்டருக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது. இதனால் கோயிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது.
காசி விஸ்வநாதர் கோயிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023ஆம் ஆண்டு கூட்டம் போடப்பட்டு, கோயிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. இதனால் பழமையான கோயிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாததும், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு நாள்தோறும் பணிகளை செய்தால் மட்டுமே, ஏப்ரல் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக பணிகளை முடிக்க இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிசேகம் நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். மேலும் கோயில் திருப்பணிகள் குறித்து சென்னை IIT குழு மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.