For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

05:17 PM Dec 10, 2023 IST | Web Editor
காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்க வேண்டும்   உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Advertisement

மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், காப்பீடு தொகை வழங்க நிறுவனம் மறுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

புதுக்கோட்டையை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். அரசின் ஓய்வூதியம் பெற்று வருகிறேன். ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. நான் கேன்சரால் பாதிக்கப்பட்டேன்.

இதனைத்தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் டிச. 03 முதல் டிச. 09-ம் தேதி வரை இடது சிறுநீரகக் கட்டி புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். மருத்துவ செலவுக்காக ரூ.1,24,576/- மருத்துவமனையில் செலுத்தினேன். தனியார்  மருத்துவ காப்பீடு நிறுவனத்தில் மருத்துவகாப்பீடு செய்ததன் அடிப்படையில், மருத்துவ செலவுக்கான காப்பீடு தொகை கோரி விண்ணப்பம் செய்தேன். என்னுடைய மருத்துவ காப்பீடு தொகை கோரிக்கையை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிராகரித்தது.

காரணம், காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எனவே எனக்கு தகுதி இல்லை என்று கூறி காப்பீடு நிறுவனம் என்னுடைய  கோரிக்கையை நிராகரித்தது. நெட்வொர்க் மருத்துவமனை மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே மருத்துவக் காப்பீடு தொகை வழங்கப்படும் என கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே எனக்கு காப்பீடு நிறுவனம், காப்பீடு தொகை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு  நீதிபதிகள்  எஸ்.எம்.சுப்ரமணியம் , லட்சுமி நாராயணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் சிகிச்சை எடுத்துக்கொண்ட நெட்வொர்க் மருத்துவமனை மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மட்டுமே மருத்துவக் கோரிக்கை தீர்க்கப்படும் என்று சமர்ப்பித்துள்ளார்.  மருத்துவமனைகள் காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியலின் கீழ் வரவில்லை என்ற காரணத்திற்காக மருத்துவத்  காப்பீடு தொகை செலுத்தாமல் இருக்கக்கூடாது.

தற்போதைய வழக்கில், மனுதாரர் எடுத்த சிகிச்சையின் உண்மைத்தன்மை மறுக்கப்படவில்லை. சிகிச்சை உண்மையானது என கண்டறியப்பட்டவுடன், மனுதாரரின் மருத்துவ கோரிக்கையை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை. எனவே, ஓய்வூதியர் எடுத்துக்கொண்ட சிகிச்சைக்கு காப்பீடு வழங்க இயலாது என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆறு  வாரங்களுக்குள் ஓய்வூதியருக்கு வழங்க வேண்டிய காப்பீடு தொகையை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement