"தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக மோடி அரசை ரத்து செய்யலாம்" - அகிலேஷ் யாதவ்
"தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக மோடி அரசை ரத்து செய்யலாம்" என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு இன்று (ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் நேற்று இரவு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது.
இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை சார்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை இதனை தெரிவித்துள்ளது.
சில போட்டித் தேர்வுகளின் அறம் சார்ந்து எழுந்துள்ள குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வின் செயல்முறையின் தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்யும் நோக்கில் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு வருந்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளை விசாரிக்க மத்திய அரசு சிபிஐயிடம் உத்தரவிட்ட நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதன் ஒருபகுதியாக சிபிஐ முதல் எப்ஐஆர் பதிவு செய்தது. இதனையடுத்து முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நீட் முதுகலை தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாவது..
“ தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்வதே நல்லது என மக்கள் நினைக்கிறார்கள்” என அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார்.