“#Mullaperiyar அணையில் 12 மாதங்களுக்குள் ஆய்வு நடத்த வேண்டும்” - பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு!
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் 12 மாதங்களுக்குள் அணை பாதுகாப்பு தொடர்பான ஆய்வை நடத்த வேண்டும் என முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் அக்குழுவின் தலைவர் ராகேஷ் காஷ்யாப் தலைமையில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள மத்திய நீர் வளத்துறை ஆணைய தலைமை அலுவலகத்தில் இன்று (செப். 2) நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொண்ட பின்னர் அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதா? அல்லது பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்த பின்னர் பராமரிப்பு பணியை மேற்கொள்வதா? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொண்ட பின்னர், அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், அணையின் பாதுகாப்பு தொடர்பான பராமரிப்பு பணியை மேற்கொள்ள உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோல், கேரளா தரப்பில் அணை பாதுகாப்பு தொடர்பான ஆய்வை கால தாமதம் செய்யாமல் உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இரு மாநில கருத்தை கேட்ட பின்னர், வள்ளக்கடவு முதல் பேபி அணை வரையிலான 5 கிமீ பகுதியில் சாலை அமைப்பது தொடர்பான மதிப்பீட்டுத்தொகை அறிக்கையை கேரள அரசிடம் தமிழ்நாடு அரசு சமர்பிக்க வேண்டும் என முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு அறிவுறுத்தியது.
அதேபோல, இயந்திரங்களை எடுத்துச்செல்வதற்கு ஏதுவாக சுமார் 15 மரங்களை வெட்ட கேரளா அரசு அனுமதிக்கவும், அதுதொடர்பான திட்ட அறிக்கையையும் கேரள அரசிடம் சமர்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அணையின் உறுதி தன்மையை 12 மாதங்களுக்குள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அணை பாதுகாப்பு தொடர்பான ஆய்வை நடத்த வேண்டும் எனவும் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.