மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 23) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் லாரா வோல்வர்ட் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாஸ்மின் பிரிட்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேரிசன் காப் 7 ரன்களிலும், போஸ்க் 5 ரன்களிலும், சுனே லாஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நடைன டீ கிளார்க் 26 ரன்களிலும், டீ ரிடர் 26 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படியுங்கள் : “நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம்” – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
இந்நிலையில், 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வெர்மா களமிறங்கினர். ஷஃபாலி வெர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், ஸ்மிருதி மந்தனாவுடன் பிரியா புனியா ஜோடி சேர்ந்தார். பிரியா புனியா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 83 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 42 ரன்களில் அவுட் ஆனார். மேலும், ஜெமிமா 19 ரன்களிலும், ரிக்கா கோஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 40.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.