IND vs NZ | "தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்" - இந்திய அணியின் கேப்டன் #RohitSharma!
நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான தோல்விக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
"சொந்த மண்ணில் தோல்வி அடைந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த தொடரில் சரிவர அணியை வழிநடத்தவில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை. இந்த தோல்வியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் தோற்று விட்டோம். இந்த டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை. நியூசிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடினார்கள்.
தொடர்ச்சியாக நிறைய தவறுகளை செய்தோம். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் போதுமான ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் 28 ரன்கள் முன்னிலை பெற்றோம். அதேபோல் 2வது இன்னிங்சிலும் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எளிதாக சேஸ் செய்யப்படக் கூடியதுதான். இதுபோன்ற இலக்கை சேஸ் செய்யும்போது, விரைவாக ரன்கனை சேர்க்க வேண்டும் என நினைத்தோம்.
அதனை சரியாக செயல்படுத்த முடியவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் எனக்காக ஒரு திட்டம் வகுத்து விளையாடினேன். அதுவும் எனக்கு கைகொடுக்கவில்லை. இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். இந்த தொடரில் சீனியர் வீரர்களை விடவும் ரிஷப் பண்ட், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். சீனியர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் 3 அல்லது 4 ஆண்டுக்கு ஒருமுறை தான் ஒவ்வொரு மைதானத்தில் விளையாடுகிறோம். இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் முயற்சித்த எந்த விஷயமும் கைகூடவில்லை. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் ஒரு அணியாகவும் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம்."
இவ்வாறு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.