பாகிஸ்தானில் பிரபலமாகும் இந்திய சைவ உணவுகள்!
பாகிஸ்தானின் தொழில்துறை மற்றும் பொருளாதார மையமான கராச்சி நகரம், உணவுப் பிரியா்களுக்கு உணவுத் தலைநகராகமாகவும் மாறியுள்ளது.
கராச்சி நகரத்தின் உணவுப் பிரியர்கள் மத்தியில் இந்திய சைவ உணவு வகைகள் சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சி நகரில் விலை உயர்ந்த ஐரோப்பிய மற்றும் இத்தாலிய உணவு வகைகள் முதல், மலிவான சீன உணவு வகைகள் வரை உள்ளன.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்த கராச்சியின் நாராயண் வளாகத்தில், பல உணவகங்கள் மட்டுமின்றி, நூற்றாண்டுகள் பழைமையான சுவாமிநாராயண் கோயில் மற்றும் பல குருத்வாராக்களும் உள்ளன. நாராயண் வளாகத்தில் இந்துக்களால் நடத்தப்படும் சைவ உணவகங்கள் மட்டுமின்றி கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகத்தினராலும் நடத்தப்படும் சைவ உணவகங்களும் சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள் : ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மாடியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து! – விமானி உயிரிழப்பு
இது குறித்து நாராயண் வளாகத்தில் உள்ள மஹாராஜ் கரம்சந்த் உணவகத்தின் உரிமையாளர் கூறியதாவது :
"உணவகத்தில் பழைய மர நாற்காலிகள் தவிர ஆடம்பரமாக ஏதும் இல்லை. ஆனால், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களை ஈர்ப்பது வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா மற்றும் புதிய காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள். எங்கள் உணவகத்தின் சோயாபீன்ஸ் ஆலு பிரியாணி, ஆலு டிக்காஸ், பன்னீர் கராஹி மற்றும் கலவையான காய்கறிகள் மிகவும் பிரபலமானவை. இந்திய சைவ உணவுகளான பாவ் பாஜி, வடா பாவ், மசாலா தோசை மற்றும் தோக்லா ஆகியவை இங்குள்ள உணவு பிரியர்களின் விருப்பமானதாக மாறிவிட்டது. இந்த உணவுகள் விலை குறைவாகவும், சுவையானதாகவும் உள்ளன. விரைவில் சமைக்கப்படுவதாலும் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.