டெல்லி வந்தடைந்தார் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ!
குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ இந்தியா வந்தடைந்தார்.
76-வது குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு குடியரசு தின அணிவகுப்பிலும் வெளிநாட்டைச் சேர்ந்த அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வார்.
அந்த வகையில் குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 73 வயதான அவர் முன்னாள் ராணுவ தளபதி ஆவார். கடந்த அக்டோபர் மாதம் அவர் அதிபராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ நேற்று (ஜன. 23) இரவு டெல்லி வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கிரெட்டா உற்சாகமாக வரவேற்றார். டெல்லி வந்துள்ள இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்றார்.