இந்தோனேஷியா பொதுத் தேர்தல் - வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட பிரபோலோ சுபியாண்டோ!
இந்தோனேஷியா பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் தான் வெற்றி பெற்றதாக பிரபோலோ சுபியாண்டோ அறிவித்துக் கொண்டார்.
உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் நாடு இந்தோனேசியா. கிட்டத்தட்ட 20 கோடி வாக்காளர்களை கொண்ட இந்தோனேஷியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதேபோல பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் காலையிலேயே வாக்குசாவடி மையங்களில் குவிந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.
அதிபர் தேர்தலையொட்டி இந்தோனேஷியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அதிபராக இருந்த ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டார். இதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் இவர்களிடையே மும்முனை போட்டி நிலவியது.
தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2-வது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும். கருத்து கணிப்புகளின்படி பாதுகாப்பு அமைச்சரான பிரபோலோ வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் 52 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்றன. ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நேற்று இரவே பாதுகாப்பு அமைச்சரான பிரபோலோ சுபியாண்டோ தான் வெற்றி பெற்றதாக மக்கள் முன்னிலையில் அறிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் “ என்னதான் நாம் மக்களிடம் ஆதரவை பெற்றிருந்தாலும் கர்வத்துடன் நடக்கக் கூடாது. பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” என உரையாற்றினார்.