நடுவானில் குலுங்கிய இண்டிகோ விமானம் - ஆலங்கட்டி மழையால் சேதம்!
தலைநகர் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த மே 21ம் தேதி புறப்பட்ட இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 220-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது கடுமையான காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கியதால் நடுவானில் பறக்க முடியாமல் விமானம் குலுங்கியது. இருப்பினும் விமானம் பாதுகாப்பாக ஸ்ரீநகரில் தரையிறங்கியது.
இந்த விவகாரத்தின் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதேவேளையில், விமானக் குழுவின் கூற்றின்படி, கடுமையான வானிலையைத் தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைய அனுமதி கோரியபோது அதனை பாகிஸ்தான் (லாகூர்) மறுத்துவிட்டதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், புயலைத் தவிர்க்க சர்வதேச எல்லை பகுதிக்கு செல்வதற்கான அனுமதியை இந்திய விமானப்படை மறுத்துவிட்டதாகவும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.