இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம்! எங்கே தெரியுமா?
இந்தியாவிலேயே முதன்முறையாக புவனேஸ்வரில் முதல் அரிசி ஏடிஎம்-ஐ திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்தியாவில் முதல் அரிசி ஏ.டி.எம் மையத்தை புவனேஸ்வரில் நேற்று திறந்து வைத்தார். அதன்பின் பேசிய அவர்,
“பயனாளிகளுக்கு, சரியான எடையில் அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் குறிக்கோள். இது இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம். பல்வேறு சோதனைகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. ஒடிசாவில் 30 மாவட்டங்களில் அரிசி ஏடிஎம்-ஐ விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.
குடும்ப அட்டைத்தாரர்கள் அரிசி வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தில் தங்களது குடும்ப அட்டை அல்லது ஆதார் கார்டு எண்ணை பதிவிட்டு அவர்களுக்கான 25 கிலோ அரிசியை பெற்றுச் செல்லலாம். இனி நீண்ட நேரம் நியாய விலை கடைக்கு முன்பு வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை கணிசமாக குறைக்க முடியும். இந்த முறை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.