வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளான என்விஎஸ்-02-வை இன்று விண்ணில் ஏவுகிறது. இந்த மைல்கல் பணி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் நடைபெற்றது. இத்தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கைகோள் விண்ணில் பாய்கிறது.
இந்த செயற்கை கோளில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
100-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணி கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. அதன்படி ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று (ஜன.28) காலை 5.23 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் இன்று (ஜன.29) காலை 6.23 மணிக்கு வெற்றிகரமாக ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.