For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#IndianNavy | விரைவில் இந்திய கடற்படையில் இணையும் #Tushil #Tamal போர் கப்பல்கள்!

03:47 PM Nov 12, 2024 IST | Web Editor
 indiannavy   விரைவில் இந்திய கடற்படையில் இணையும்  tushil  tamal போர் கப்பல்கள்
Advertisement

ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.

Advertisement

இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யாவின் கலினின் கிராட்டில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் போர்க்கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டில் போர்க்கப்பல்கள் இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக போர்க்கப்பல்களை தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்த சூழலில் 2 போர்க்கப்பல்களை மட்டும் ரஷ்யாவில் தயாரிக்கவும் மீதமுள்ள 2 போர்க்கப்பல்களை இந்தியாவின் கோவாவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி ரஷ்யாவில் 2 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வெள்ளோட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் முதல் போர்க்கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பரில் ரஷ்யாவுக்கு சென்று புதிய போர்க்கப்பலை இந்திய கடற்படையில் இணைக்க உள்ளார்.

இதற்கு ஐஎன்எஸ் துஷில் என்று பெயரிடப்பட்டு உள்ளது. சம்ஸ்கிருதத்தில் துஷில் என்றால் பாதுகாவலன் என்று அர்த்தம். புதிய போர்க்கப்பல் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள்,

“ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. முதல் போர்க்கப்பலான துஷில் வரும் டிசம்பரில் கடற்படையில் இணையும். 2வது போர்க்கப்பலான துமாலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்கும். இரு போர்க்கப்பல்கள் மூலம் எதிரிகளின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்த போர்க்கப்பல்களில் பொருத்தப்பட்டு உள்ளன. போர்க்கப்பல்களில் ஹெலிகாப்டரை நிறுத்த இடவசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் மூலம் நீர்மூழ்கிகளை தாக்கி அழிக்க முடியும். ஒரு போர்க்கப்பலின் எடை சுமார் 4,000 டன் ஆகும். 409 அடி நீளம், 50 அடி உயரம் கொண்ட போர்க்கப்பலில் ரஷ்ய தயாரிப்பு சூப்பர்சானிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன.

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 30 நாட்கள் வரை கடலில் தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும் திறன் கொண்டது. ரஷ்ய தொழில்நுட்பத்தில் இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படும் 2 போர்க்கப்பல்கள் அடுத்த ஆண்டு ஜூலையில் கடற்படையில் சேர்க்கப்படும். இதன்மூலம் இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும்” என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :
Advertisement