#IndianBank Local Bank Officers Exam | தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் இருந்தும் வேறு மாநிலங்களில் தேர்வு - சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!
இந்தியன் வங்கி உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்விற்கு, தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் இருந்தும் ஹைதராபாத், பெங்களூர், மைசூர் என்று தேர்வு மையங்களை நிச்சயித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி. இந்தியன் வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரிகள் (Local Bank Officers) பதவியில் 300 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 160 இடங்கள் நிரப்பப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 300 காலிப்பணியிடங்களில் பாதிக்கும் மேல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு அறிவிக்கப்பட்டது.
- விண்ணப்பதார்களின் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தேவைப்பட்டால் விண்ணப்பத்தார்களுக்கு எழுத்துத் தேர்வு, அதனைத்தொடர்ந்து நேர்காணல் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அக். 10-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175, இதரப் பிரிவினருக்கு ரூ.1000 ஆன்லைன் வழியாக செலுத்தி விண்ணப்பத்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்படவில்லை எனவும், ஹைதராபாத், பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் மட்டுமே மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“இந்தியன் வங்கி லோக்கல் ஆபிசர் பதவிக்கான தேர்வுகள் 10.10.2024 அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மையங்கள் இருந்தும் இங்கே மையங்கள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு ஹைதராபாத், பெங்களூர், மைசூர் என்று தேர்வு மையங்களை நிச்சயித்துள்ளனர். வரும் 11, 12 தேதிகளில் சரஸ்வதி பூஜை, விஜய தசமி... நவராத்திரி விழா நேரம். 13 ஆம் தேதி வங்கி தேர்வாணைய நியமனத் தேர்வு வேறு உள்ளது. இத்தகைய கடும் நெருக்கடியில் தேர்வர்கள் என்ன செய்வார்கள்? போக்குவரத்து, தங்குமிடம், தேர்வுக்கான மன நிலை எல்லாமே சிக்கல் ஆகாதா? தமிழ்நாடு தேர்வர்களுக்கு உடனடியாக மாநிலத்திற்குள் மாற்று தேர்வு மையம் ஏற்பாடு செய்ய வேண்டி இந்தியன் வங்கி தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.