இந்திய பல்கலைக்கழகங்களில் இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை!
உலகளாவிய நடைமுறைக்கு ஏற்ப இனி இந்தியாவிலும் ஆண்டுக்கு இருமுறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, “2024-25ம் கல்வியாண்டு முதல், ஜூலை-ஆகஸ்ட் மற்றும் ஜனவரி-பிப்ரவரி என இரு சேர்க்கை சுழற்சிகள் நடைமுறைக்கு வருகின்றன. உலகளவில் முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்த வகையிலான ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை நடைமுறையை ஏற்கனவே பின்பற்றி வருகின்றன. இந்திய உயர் கல்வி நிறுவனங்களும் இத்தகைய சேர்க்கை சுழற்சியை ஏற்றுக்கொண்டால் நமது உயர் கல்வி நிறுவனங்கள், சர்வதேச கல்வி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பையும் மாணவர் பரிமாற்றத்தையும் மேம்படுத்த முடியும். இதன் விளைவாக, நமது உலகளாவிய போட்டித்தன்மை மேம்படும். மேலும் உலகளாவிய கல்வித் தரங்களுடன் இணைய வாய்ப்பாகும்” என யுஜிசி கருதுகிறது.
எனினும் இந்த நடைமுறை கட்டாயமில்லை என்றும், தேவையான உள் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.