கடும் சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள்!
இந்திய பங்குசந்தை வர்த்தகம் இன்று காலை மீண்டும் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் கடும் வீழ்ச்சியை கண்டன.
இதனிடையே நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 706 புள்ளிகள் குறைந்து 80,080.57 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் ஆனது. மும்பை பங்கு சந்தையின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.449 லட்சம் கோடியில் இருந்து ரூ.445 லட்சம் கோடி என சரிந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 211 புள்ளிகள் சரிந்து, (1 சதவீதம்) 24,500.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்றது. அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் பங்கு சந்தையில் எதிரொலித்து உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் பிஎஸ்இ சென்செக்ஸ் 271 புள்ளிகள் சரிந்து 79,809 புள்ளிகளில் உள்ளது. அதேபோல், நிஃப்டி 24,450க்கு கீழே சரிந்தது. டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட 50% வரிகளின் பொருளாதார தாக்கங்களுடன் சந்தைகள் போராடியதால் இது மற்றொரு பலவீனமான அமர்வைக் குறித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்செக்ஸ் பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக 2% சரிந்துள்ளது.