கிரீஸ் நாட்டில் இந்திய தயாரிப்பு வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!
கிரீஸ் நாட்டில் இந்தியாவின் 'எச்ஏபி பார்மா' நிறுவனம் தயாரித்த 37.5 லட்சம் 'நர்விஜெசிக்' வலி நிவாரண மாத்திரைகளை கைப்பற்றியதாக அந்நாட்டு கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.
கிரீஸ் நாட்டில் எகிப்து நாட்டைச் சேர்ந்த சிலர் கடத்தல் செயல்பாடுகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு உளவு அமைப்பு அளித்த தகவலின்படி, கிரீஸ் தலைநகர் ஏதென்ஸுக்கு தென்கிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லாவ்ரியோ துறைமுகத்தில் மார்ச் 21 ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றில், இந்தியாவின் 'எச்ஏபி பார்மா' நிறுவனம் தயாரித்த 37.5 லட்சம் 'நர்விஜெசிக்' மாத்திரைகள் கடலோரக் காவல் படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பிரிட்டன் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தும் வரையில், படகு லாவ்ரியோ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
'நர்விஜெசிக்' என்பது நரம்பு வலிக்குப் பயன்படுத்தப்படும் பிரீகாபலின் மருந்து. நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களால் ஏற்படும் நரம்பு வலிக்கு சிகிச்சையளிக்க பிரீகாபலின் மருந்து பயன்படுத்தப்படுகிறது.