இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா அறிமுகம் ; மாநில உரிமைகளை பறிப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு...!
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய உயர்கல்வி ஆணைய மசோதாவை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவின் படி, பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவை கலைக்கப்பட்டு, இதற்கு மாற்றாக அனைத்தும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படும். இதன் மூலம் கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், பொறியியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகங்கள் ஆகியவை ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மசோதா பல்கலைக்கழக செயல்பாடுகளை முழுமையாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் வழங்கி மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக கூறி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்கட்சி எம்.பி. களின் எதிர்ப்பை தொடர்ந்து உயர்கல்வி ஆணைய மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பிவைக்க முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூதெரிவித்துள்ளார்.