முத்தையா முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்த இந்திய நாயகன் #RavichandranAshwin!
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வென்றது. பாகிஸ்தானை போல உங்களையும் வீழ்த்துவோம் என்று சவால் விட்ட வங்கதேசத்தை சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு சதமும், 5 விக்கெட்டுகளும் எடுத்து முக்கிய பங்காற்றிய அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதைத் தொடர்ந்து கான்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இந்திய அணி பேட்டிங்கில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72 மற்றும் 51, விராட் கோலி 47 மற்றும் 29, ராகுல் 68, கில் 39 ரன்கள் எடுத்தனர். பந்து வீச்சில் பும்ரா 6, அஸ்வின் 5, ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு மொத்தமாக 114 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் முழுவதும் முக்கிய பங்காற்றினார். மேலும் இந்தத் தொடரின் தொடர்நாயகன் விருதையும் ரவிச்சந்திரன் அஸ்வின் தட்டிச் சென்றார்.
இதையும் சேர்த்து அஸ்வின் தனது கேரியரில் 11 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்நாள் உலக சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். 60 தொடர்களில் முரளிதரன் வென்ற 11 தொடர்நாயகன் விருதுகளை, அஸ்வின் 21 தொடர்கள் குறைவாக வெறும் 39 தொடர்களிலேயே சமன் செய்துள்ளார்.