பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் - அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் கூறுவது என்ன?
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், சில நாடுகள் இரு நாடுகளும் தாக்குதலை கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய தாக்குதலுக்கு சீனா வருத்தம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்,
“தற்போதைய சூழல் குறித்து கவலை கொள்கிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருப்பர். அவர்கள் இருவரும் சீனாவின் அண்டை நாடுகளும் கூட. சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மனதில் வைத்து இரு தரப்பும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அமைதியாக, கட்டுப்பாட்டுடன் இருந்து, சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்க்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா;
“It's a shame. இப்படி ஒரு மோதல் வெடிக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதான். பல சதாப்தங்களாக இரு நாடுகளும் மோதி வருகின்றன. இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான இஸ்ரேலின் தூதர் ரூவன் அசார்:
“இந்தியாவின் சுய பாதுகாப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிரான அவர்களின் கொடூரமான குற்றங்களிலிருந்து ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதை பயங்கரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்” என ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் யோஷிமாசா ஹயாஷி:
ஜப்பானை பொறுத்தவரை ஏப்.22 காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் உட்பட இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை உறுதியாகக் கண்டிக்கிறது. இருப்பினும், தெற்காசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடித்து, பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் அழுத்தமாக வலியுறுத்துகிறோம்.
ஈரான்;
“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் தாக்குதலால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்புக்காகவும், விரைவில் அமைதி திரும்பவும் நாங்கள் பிராத்திக்கிறோம்” என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர்;
“கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையைத் தாண்டிய இந்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்து பொதுச் செயலாளர் மிகவும் கவலை கொண்டுள்ளார். இரு நாடுகளும் ராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவ மோதலை உலகம் தாங்காது” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ;
"இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை நான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். இது விரைவில் முடிவடையும் என்றும், அமைதியான தீர்வை நோக்கி இந்திய மற்றும் பாகிஸ்தான் தலைமைகளை தொடர்ந்து ஈடுபடுத்துவோம் என்று ட்ரம்ப் கூறியதை நான் எதிரொலிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.