மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு!
இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுசெய்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்ஸு சீனாவின் அதிபரை சந்தித்தார். அவர் நேற்று நாடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய அரசு மாலத்தீவில் உள்ள தனது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்ஸு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் தரப்பில் இந்த அறிக்கை பிறப்பித்துள்ளனர்.
கடந்தாண்டு நடந்த மாலத்தீவு தேர்தல் பிரசாரத்தின் போதே முய்ஸு, இந்தியாவுடனான உறவுகளைக் குறைப்பேன் என்றும் சீனாவுடனான உறவை மேம்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார். அப்போதே அவர் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தையும் வெளியேற்றுவேன் என்பதை முன்வைத்து இந்தியா அவுட் என் பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தார். தொடர்ந்து அதிபராகத் தேர்வான பிறகு அவர் கடந்த நவ. மாதம் இந்தியா தனது வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.
சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாகச் சென்றிருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நேற்று நாடு திரும்பிய நிலையில் அவர் கூறியதாவது:
“எங்கள் நாடு சிறியதாக இருக்கலாம், ஆனால் அதற்காக எங்களை கிண்டல் செய்ய உரிமம் பெற்றுள்ளதாக அர்த்தமல்ல. இந்தக் கடல் குறிப்பிட்ட நாட்டிற்குச் சொந்தமானது அல்ல. இந்த இந்தியப் பெருங்கடல், அதைச் சுற்றிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. நாங்கள் யாரோ ஒருவரின் கொல்லைப்புறத்தில் இருக்கும் நாடு அல்ல. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு நாடு” இவ்வாறு தெரிவித்தார்.