வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் ரன்களை அள்ளி குவித்தனர். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ரன்களும், சுப்மன் கில் 129 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 81.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 41 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்திய அணி 270 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து பாலோ ஆன் கொடுக்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான் கேம்ப்பெல் 115 ரன்களும், ஷாய் ஹோப் 103 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
தொடர்ந்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி வீரர்கள் அதிரடியாக ஆடிய நிலையில் 5ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 124ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 58 ரன்கள் எடுத்தார்.