"அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது" - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு ஜெர்மனி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் வதேபாலை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புவிசார் அரசியல், புவி பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப (டிஜிஏபி) மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு சில கருத்துக்களை கூறினார். அப்போது,
"பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது. பயங்கரவாதத்தை அரசு ஆதரவு கொள்கையாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று கூறினார்.
பஹல்காம் தாக்குதலின் முக்கிய நோக்கமே மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது தான். மேலும் காஷ்மீரில் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையை சேதப்படுத்துவதோடு, நாட்டில் வகுப்புவாத மோதல்களைத் தூண்டுவது என்றார்.
தொடர்ந்து பாகிஸ்தானுடனான விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு இடமில்லை என்றும் இது தொடர்பாக யாருக்கும் எந்தவிதமான தவறான எண்ணங்களும் இருக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.