டெஸ்லா நிறுவனத்திற்கு வரிச் சலுகை இல்லை - இந்தியா அறிவிப்பு!
டெஸ்லா நிறுவனத்திற்கு இந்தியா வரிச் சலுகை அளிக்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் மின்சார கார் இறக்குமதிக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கோரியிருந்த நிலையில், எந்த ஒரு தனி நிறுவனத்துக்கும் இந்தியா சலுகை அளிக்காது என்று மத்திய அரசு உயரதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'இதுபோன்ற சலுகை அளிக்க இந்தியா முடிவு செய்தால், மின்சார கார் தயாரிக்க முன்வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான சலுகையாகத்தான் வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்: உயர்நீதிமன்றத்தில் அபராதமாக பெறும் தொகைக்கு சட்ட புத்தகம் கொள்முதல் – மதுரை கலைஞர் நூலகத்திற்கு வழங்க முடிவு!
டெஸ்லா நிறுவனத்துக்கு சுங்க வரிச் சலுகை வழங்குவது குறித்து அமைச்சகங்களுக்கு மத்தியிலான ஆலோசனை நடைபெற்றது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை' என்றார்.
டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும் என்று 2021-ல் அந்த நிறுவனம் கோரியிருந்தது. உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்கை பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் முதலில் கார்களை இறக்குமதி செய்து சோதித்த பிறகு தான் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கும் என்றும் இறக்குமதி வரி இந்தியாவில் அதிகமாக உள்ளது என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு தற்போது 60 முதல் 100 சதவீதம் வரையில் சுங்க வரி விதிக்கப்படுகிறது.