இந்தியா கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டும் கட்டமைக்கப்பட்டது அல்ல - ராகுல் காந்தி பதிவு!
இந்தியா பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கடின உழைப்பாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இந்த நடைப்பயணம் நேற்று (பிப்.01) மேற்கு வங்கத்தை அடைந்தது. கிராமப்புற தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது
“காங்கிரஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA), கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வீட்டிலிருந்தே வேலை வாய்ப்பை உறுதி செய்து, இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று நான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சில MNREGA தொழிலாளர்களைச் சந்தித்தபோது, அவர்கள் கவலையளிக்கும் தகவலைத் தெரிவித்தனர்.
வங்காளத்தில், 76 லட்சம் குடும்பங்கள் MNREGA ஐ நம்பி உள்ளனர். ஆனால் MNREGA பட்ஜெட் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, MNREGA தொழிலாளர்கள் தங்கள் கடின உழைப்புக்கு பணம் பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள 7 கோடி தொழிலாளர்களின் வேலை அட்டைகள் நீக்கப்பட்டன, மேலும் ஆதார் கட்டாயத் தேவையால் 35% தொழிலாளர்கள் MNREGA பயன்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக நரேந்திர மோடியால் MNREGA யை முற்றிலுமாக நிறுத்த முடியவில்லை, எனவே இப்போது அவர் அதை அழிக்க சதி செய்கிறார். தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி நாட்டின் பொருளாதார கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது, அதனால்தான் தொழிலாளர் நீதி என்பது நமது பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் அடிப்படை பகுதியாகும்.
நாடு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கடின உழைப்பாளிகளால் கட்டமைக்கப்படுகிறது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனப் பதிவிட்டுள்ளார்.
தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் அநீதியால் நாட்டின் பொருளாதார கட்டமைப்பு வலுவிழக்கிறது. அதனால்தான் தொழிலாளர் உரிமை காங்கிரஸ் நடைப்பயணத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. பெரிய தனியார் நிறுவனங்களால் மட்டுமல்ல, கிராமப்புற கடின உழைப்பாளிகளாலும்தான் இந்த நாடு உருவாகியுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.